ஆசிய ஹாக்கி கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

டாக்கா: ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில், பாகிஸ்தானை இந்திய அணி பந்தாடியது.

வங்கதேசத்தில் 10 வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில், இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கிறது.

‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது. துவக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 16வது நிமிடத்தில் இந்தியா சார்பில் சிங்லென்சனா முதல் கோல் அடித்தார். இதற்கு, பாகிஸ்தான் அணியினர் பதிலடி தர திணறினர்.

இந்திய வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை தொடர்ந்தனர். ராமன்தீப் (43வது நிமிடம்) இந்தியா சார்பில் இரண்டாவது கோல் அடித்தார். அடுத்த சில நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் (44) தன் பங்கிற்கு அசத்த, இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது. இதற்கு, பாகிஸ்தான் சார்பில் அலி ஷான் (47) ஆறுதல் தந்தார்.

முடிவில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.