மழை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்: சென்னை வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள்

தமிழகத்தில் பெய்து வரும் மழை பற்றி வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்வதால், 2015ம் ஆண்டில் ஏற்பட்டதைவிட, மோசமான வெள்ள பாதிப்புகள் ஏற்படும் என்றும், சுனாமி வரும் என்றும் பல வித வதந்திகளை சமூக ஊடகங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள்.

இந்த வதந்திகளால், சென்னையில் வசிக்கும் மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘’சமூக ஊடகங்களில் ஆதாரப்பூர்வமற்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். மக்களுக்கு உதவும் தகவல்களை மட்டும் பகிருங்கள். வீண் வதந்திகளால், மக்களின் அமைதியை சீர்குலைக்க வேண்டாம், ‘’ எனக் குறிப்பிட்டார்.