உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டனத் தீர்மான நோட்டீஸ்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மனுக் கொடுத்தனர். இதில், காங்கிரஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 64 எம்.பிக்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

இந்த நோட்டீசை ஏற்பதா, நிராகரிப்பதா என்பது குறித்து, மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஐதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, நேற்று டெல்லி விரைந்தார்.

அதனைத் தொடர்ந்து, மக்களவையின் முன்னாள் செயலாளரான சுபாஷ் காஷ்யப், முன்னாள் சட்டத்துறை செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா, நாடாளுமன்ற செயலகத்தின் முன்னாள் செயலாளர் சஞ்சய் சிங் மற்றும் மாநிலங்களவையின் மூத்த அதிகாரிகளை அவர் அழைத்துப் பேசினார்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆகியோருடனும் வெங்கைய நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அளித்துள்ள நோட்டீசை அவர் ஏற்கும் பட்சத்தில், புகார் குறித்து விசாரிக்க 3 நபர்களைக் கொண்ட குழுவை அமைத்து அவர் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தீபக் மிஸ்ராவிற்கு எதிரான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. தீபக் மிஸ்ரா தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.