4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது

நடப்பு ஐபிஎல் தொடரில் 22-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் பின்ச் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பின்ச் 2 ரன்களும் வெளியேற கே.எல்.ராகுலுடன் அகர்வால் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல்.ராகுல் 15 பந்துகளில் 23 ரன்களுடன் பிளங்கெட் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அகர்வால் 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவரும் பிளங்கெட் பந்தில் போல்டானார். யுவராஜ் சிங் 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அவேஷ் கான் பந்தில் பந்திடன் கேட்ச் கொடுத்து வெளியேற்றினார். டேவிட் மில்லர் 26 ரன்கள் எடுத்த போது கிரிஸ்டியான் பந்துவீச்சில் பிளங்கெட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மீண்டும் பஞ்சாப் அணி ரன் சேர்க்க முனைப்பு காட்டியது.பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 143 ரன்கள் எடுத்தது. அதன்படி 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்திவி ஷா மற்றும் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் களம் இறங்கினர். ஒருபுறம் பிரித்திவி அடித்து ஆட, கம்பீர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13 பந்துகள் சந்தித்த நிலையில் 4 ரன்கள் எடுத்து ஆண்டிரிவ் டை பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் . 10பந்துகளில் 22 எடுத்த நிலையில் ராஜ்பூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார் பிரித்திவி.

அடுத்தடுத்து வந்தவர்கள் குறைந்த ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற, ரியாஸ் மட்டும் ஒருபுறம் நின்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் டெல்லி அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது டெல்லி அணி.