சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

ஐபிஎல் தொடரில் 30 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷேன் வாட்சனும் டூ பிளெஸ்ஸிஸ் களமிறங்கினர். இருவரும் டெல்லி பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். டூ பிளெஸ்ஸிஸ் 33 ரன்கள் வெளியேற அடுத்து வந்த ரெய்னாவும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால் அந்த இழப்பை ராயுடு ஈடுகட்டினார். ராயுடுவும் வாட்சனும் இணைந்து அதிரடியை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய வாட்சன் 40 பந்துகளில் 7 சிக்சர்கள்  4 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்து மிஷ்ரா வீசிய பந்தில் பிளெங்கெட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த தோனி தனது வழக்கமான அதிரடி ஆட்டட்தை ஆடத்தொடங்கியதும் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த ஜோடி 4 விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. தோனி 22 பந்துகளில் 51 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்தது.

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ஆனால் தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களுடன் ரன் அவுட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லும் 6 ரன்களுடன் வெளியேற ரிஷப் பந்தும் வி ஷங்கரும் களத்தில் போராடினர். இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினர். அருமையான இன்னிங்ஸை ஆடிய ரிஷப் பந்த் 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து நிஜிதி வீசிய பந்தில் ஜடேஜாவிடம் கேட் கொடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில்  டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.