சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. புனேவில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஏடி ஹேல்ஸ் களமிறங்கினர். ஹேல்ஸ் 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தவானோடு ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிகர் தவான் 49 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்து பிராவோ பந்தில் அவுட் ஆனார். கேன் வில்லியம்சன் 39 பந்துகளில் 51 ரன்கள் குவித்து தாக்குர் பந்தில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன் மற்றும் அம்பட்டி ராயுடு களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தது. ஷேன் வாட்சன் 35 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 2 ரன்களுடன் வெளியேற தோனி ராயுடுவுடன் சேர்ந்தார். அவரும் நிதானமாக ஆடினார். ராயுடுவின் ஆட்டம் இன்று பிரமிக்க வைத்தது. 62 பந்துகளை சந்தித்த அவர் 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகலுடன் 100 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 19 ஓவர்களிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.