முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது மக்களை வாழ வழி வகை செய்ய வேண்டியது தான் மத்திய, மாநில அரசுகளின் கடமை. ஆனால் ராணுவத்தை அனுப்பி மக்களின் வாழ்க்கையை சிறைப்படுத்துவது நியாயமான அரசின் கடமையாக இருக்க வாய்ப்பே இல்லை என்றார்.

தூத்துக்குடிக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஏன் செல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி மாற்றம் செய்யப்பட்டது போல் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும்,  இந்த அரசே விலக வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மக்களின் கோரிக்கையே ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பது தான். இப்போது போன உயிர்கள் மட்டுமில்லாமல் உயிர் கொல்லி நோயாக ஸ்டெர்லைட் ஆலை  இருந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் துப்பாக்கி சூடு தொடர்ந்து நடப்பது வருந்தத்தக்கது வெகுண்டு எழத்தக்கது. 3 மாவட்டங்களில் இணைய தள சேவையை துண்டிப்பது என்பது அபாயகரமானது. மக்களை தீவிரவாதிகளாக ஏன் பார்க்கிறார்கள், சுட்டவர்கள் தான் தீவிரவாதிகள் மக்கள் கிடையாது. மக்கள் அமைதியாக தான் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எப்படி வன்முறை வெடித்ததோ அது போல் தான் தூத்துக்குடியில் வெடித்து உள்ளது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தூத்துக்குடி மக்களுக்காக மிகவும் வருந்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மற்ற தலைவர்களும் தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரித்தார்கள் இது ஒரு அநீதி. காவிரியில் இருந்து தண்ணீர் தர இயலவில்லை என்று தான் குமாரசாமி கூறினார். தற்போது பெங்களூரில் நல்ல மழை பெய்துக் கொண்டு இருக்கிறது. கர்நாடகாவில் அணைகள் அதிகமாக கட்டிவிட்டார்கள். ஆனால் நாம் நீரை சேகரித்து வைக்காததால் சோகங்களை அனுபவிக்கிறோம். அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் மழை பெய்து கொண்டு இருக்கிறது இது நல்ல பேச்சுவார்த்தைக்கு வழிவகைக்கும் என்று நம்பி தான் பெங்களூரூவுக்கு சென்றேன். என்னுடைய எதிர்பார்ப்பு நடக்கும், மீண்டும் சென்று அவரை சந்தித்து பேசுவேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.