கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் கோவையில் ராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, காந்திபுரம், உக்கடம், துடியலூர், கவுண்டம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  மழை பெய்து வருகிறது.

காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் மழையால் அவதியடைந்துள்ளனர். இதையடுத்து, தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று, நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக கோவை மாவட்டத்தில்  உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல, கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்றாவது நாளாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.