சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளான விஸ்வரூபம் 2

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 உருவாகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் இணைந்து ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்நிலையில் தமிழில் வெளியான டிரைலரில் “எந்த மதத்தையும் சார்ந்திருப்பது பாவமில்லை.. தேசத் துரோகியாக இருப்பது தப்பு” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்தியில் வெளியான டிரைலரில், “முஸ்லீமாக இருப்பது பாவமில்லை. தேசத் துரோகியாக இருப்பது தப்பு” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. ஒரே படத்தின் டிரைலரில் இரண்டு விதமாக வசனங்கள் இடம்பெற்றிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக விஸ்வரூபம் படத்தின் முதல்பாகம் வெளியான போது, அது இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி போராட்டங்கள் வெடித்தன. தமிழ்நாட்டில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், சில காட்சிகள் நீக்கப்பட்டு பின்பு திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.