ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த குரோஷிய

யுகோஸ்லோவியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது 1991-ம் ஆண்டு பிரிந்து சென்று தனி நாடாக உதித்தது குரோஷியா. மொத்தம் 41 லட்சம் மக்கள் தொகையை கொண்ட குரோஷியா, சென்னையில் வசிக்கக்கூடிய மக்கள் தொகையையின் மூன்றில் ஒரு பகுதியாகும். இவ்வளவு சிறிய நாடு உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறி உலகில் உள்ள ஒவ்வொரு ரசிகரையும், தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கால்பந்தை உயிர்மூச்சாக சுவாசிப்பதே இதற்கு காரணமாகும். நமது நாட்டில் வீடுகளில் கிரிக்கெட் பந்து இருப்பது போல் குரோஷியாவில் உள்ள வீடுகளை கால்பந்து அலங்கரிக்கிறது. 1998 உலகக் கோப்பையில், அரையிறுதி வரை முன்னேறி, குரோஷியா என்ற நாடு உதயமாகியதை எடுத்துரைத்தது.

ரஷ்யாவில் நடைபெற்ற தொடரின், இறுதி போட்டியில் தோல்வியடைந்தாலும், உலகில் உள்ள ஒவ்வொரு கால்பந்து ரசிகர் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளதுது- இதற்கெல்லாம் காரணம் குரோஷியாவின் கேப்டன் மோட்ரிச் என்று சொன்னால் மிகையாகாது.

உள்நாட்டில் நடந்த போரால் அகதியான மோட்ரிச் சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டு மீது தீராக்காதல் கொண்டுள்ளார். ஸ்ட்ரீட் பிளேயராக இருந்த மோட்ரிச், விடா முயற்சியாலும் அசாத்திய திறமையாலும் குரோஷிய அணியை வழிநடத்தும் அளவிற்கு உயர்ந்தார். இறுதிப் போட்டி வரை அணியை அழைத்துச் சென்ற இவர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் மட்டும் 72 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு ஓடி, 523 பாஸ்கள் செய்து அசத்தியுள்ளார்.

மோட்ரிச்-சுக்கு பக்கபலமாக அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் செயல்பட்டனர். மற்றொரு நடுகள வீரர் ராக்கிடிச் மைதானத்தில் பம்பரமாக சுழன்று அணிக்கு தூணாக திகழ்ந்தார். குரோஷிய அணி ஒருவரை மட்டுமே நம்பியில்லாமல் ஒட்டுமொத்த வீரர்களின் திறமையையும் மூலதனமாக வைத்து இந்த சாதனையை எட்டிப்பிடித்துள்ளது. குரோஷிய அணியில் 8 வீரர்கள் கோல் அடித்துள்ளதே இதற்கு சிறந்த உதாரணமாகும்.

குரோஷிய அணியின் பயிற்சியாளர் தாலிக் சலாக்கோ, 1998-ம் ஆண்டு தனது அணிக்காக விளையாடியவராவார். அவரே அணிக்கு பயிற்சியாளராக கிடைத்தது கூடுதல் பலமாக அமைந்தது. அவர் வகுத்த ஒவ்வொரு வியூகங்களும் இந்த போட்டியில் குரோஷியாவை தலை நிமிரச்செய்துள்ளது. போட்டியின் போது, ஆரம்பத்தில் கோல் வாங்கினாலும் வீரர்கள் சோர்வடையாமல் கடுமையாக போராடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே குரோஷியாவின் பலமாக பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ரகசியத்தை இறுதி போட்டியில் மறந்ததே அந்த அணி தோல்வியடைய காரணமாக அமைந்தது. இருப்பினும் குரோஷிய வீரர்கள் தனது அசாத்திய திறமையால் உலகில் உள்ள ஒவ்வொரு ரசிகர்களையும் தங்கள் அணியின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளனர்.