இது என் தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றி பேசும் கதை

52 வயது நிரம்பிய பெண் ஒருவர், 25 வருடங்களாக தன் கணவருடன் உறவு கொள்ளாமல் இருப்பதாகவும், அதனால் அவருக்கு ஏற்பட்ட உளவியல் சிக்கல்கள் குறித்தும் நமது பெண் செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்டார். இந்த பிரச்னை நமது சமுதாயத்தில் அனேக பெண்களுக்கு இருப்பதுதான் என்பதால், நமது லைஃப்ஸ்டைல் பகுதியில் அவருடைய உணர்வுகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு, ஒரு மருத்துவர் மூலம் தீர்வு காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இது என்னுடைய தாம்பத்ய வாழ்க்கையை பற்றி பேசும் கதை என்பதால் பெரும் தயக்கத்துடனேயே எழுதுகிறேன். நான் 52 வயதை கடந்திருக்கும் பெண், ஆனாலும் இன்றளவும் தாம்பத்ய உறவை என் கணவரிடம் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன். என் 23 வயதில் என்னைவிட 9 வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்டேன். என் திருமணம் பெரியவர்களால் நிச்ச்சயிக்கப்பட்டு நடந்த ஒரு திருமணம்தான். எல்லா நிச்சயக்கப்பட்ட திருமணங்களில் நடக்கும் மேஜிக் என்னுடைய வாழ்க்கையிலும் நடந்தது. அவர்தான் எனக்கானவர் என குடும்பம் உறுதி செய்த பின் வரும் கண்டதும் காதல் என திருமண வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது.

நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள். நன்றாக படித்திருந்தாலும் வேலைக்குப் போகவிடவில்லை. கணவன் அனுமதிக்கும் ‘கற்பனைக்கு எட்டாத’ சுதந்திரத்தை மட்டுமே அனுபவிக்க அனுமதிக்கப்பட்டவள். திருமணம் ஆன புதிதில் எங்களுக்கிடையேயான தாம்பத்ய உறவு நன்றாகவே இருந்தது, கிட்டத்தட்ட தினமும் நாங்கள் உறவில் ஈடுபட்டோம், வீடு முழுக்க உறவினர்கள் இருந்தாலும் எங்களுக்கான அந்தரங்க நேரத்தை உருவாக்கிக் கொண்டோம். நாங்கள் இருவரும் இணைந்து பயணங்கள் பல சென்றுள்ளோம். அவர் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள், சீண்டல்கள் இன்றும் என் நினைவில் உள்ளது. தாம்பத்ய வாழ்க்கையின் தொடக்கத்தில் நான் மிகவும் தயக்கதுடனும் வெட்கத்தோடும்தான் இருந்தேன், ஆனால் என் கணவர் கலவியில் விதவிதமான உத்திகளை எக்ஸ்பிரிமெண்ட் செய்ய என்னை வற்புறுத்தினார். ஒரு கட்டத்தில் நானும் சுவரஸ்யமாக ஈடுபடத் தொடங்கினேன்.

என் சிறு வயதிலிருந்தே கொஞ்சம் தடித்த உடல்வாகைக் கொண்டிருந்தாலும் அழகாகவே இருந்தேன். நான் குண்டாக இருக்கிறேன் என்பதைப் பற்றிய தாழ்வுணர்ச்சி எப்போதும் இருந்துவந்தது. மில்ஸ் & பூன்ஸ் கதைகளின் வழி மட்டுமே செக்ஸை பற்றி தெரிந்துகொண்டிருக்கிறேன். என் தனிமையான பொழுதுகளில் செக்ஸ் குறித்த கற்பனைகள் இருந்தாலும், அதைத்தாண்டி எதையும் செய்து பார்க்க முயற்சித்தது இல்லை. ஆனால் என் கணவர் மிகவும் ஒல்லியாக பூஞ்சையான தோற்றத்தில் இருப்பார். ஆனால் திருமணத்திற்கு முன்பே பல செக்ஸ் வீடியோக்களை பார்த்திருக்கிறார். அவரைப் பார்த்த எங்கள் உறவினர்களும், மற்ற பெண்களும் என்னை அதிர்ஷ்டசாலி என்பார்கள். இப்படி குடும்பத்திற்கு ஏற்ற வகையில் வேலையும் செய்து அன்பாக பார்த்துக் கொள்ளும் நபர் யாருக்கு கிடைக்கும் என்பார்கள். என் உறவுப்பெண்கள் பலரும் அவரைப் போன்ற கணவர்தான் தங்களுக்கு அமைய வேண்டும் என்று என்னிடமே சொல்வார்கள். இவர்களின் பேச்சை ஒருபோதும் நான் ரசித்தது இல்லை.

நான் மிகவும் தைரியமாக எதையும் நேரடியாக பேசக்கூடிய பெண் ஆனாலும் என்னுடைய துடுக்கான பேச்சால் பலமுறை பிரச்னைகளில் சிக்கியிருக்கிறேன். ஆனால் என் கணவர் அமைதியாக அதே நேரத்தில் ஆளுமையுடன் செயல்படக் கூடியவர். ஆனால் நான் என் கணவரின் பார்வையில் ‘எதற்கும் அடங்காதவளாகவும், சொல் பேச்சை கேட்காதவள்’ என்ற அளவில்தான் நான் இருந்திருக்கிறேன். எங்களுக்கிடையே சின்னச் சின்ன சண்டைகள் தோன்றும், நான் கோபப்பட்டு பேசினாலும் அரைமணி நேரத்தில் அந்த சண்டையை மறந்து விடுவேன். ஆனாலும் அவ்வளவு எளிதாக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். என் கணவர் முற்றிலும் வித்தியாசமானவர் சண்டை போட்டாலும் மனதை காயப்படுத்தும் எந்த வார்த்தையும் பேசிவிடமாட்டார். அதற்கு மாறாக என்னிடம் சிரித்து பேசவோ அல்லது படுக்கையறையில் தொடவோ அனுமதிக்க மாட்டார். எதையும் நேரடியாக பேசிப்பழகிய எனக்கு, பேசாமல் இருக்கும் அவரின் செயல் எனக்கு தரும் பெரிய தண்டனையாகவே தோன்றும்.
இப்போது அதை யோசிக்கும்போது, எதையும் பேசாமலேயே அவர் தனக்கானதை சாதித்துக் கொண்டாரோ என்று நினைக்கிறேன். அவரின் கோபம் குறைந்து சமாதானமானால்தான் சிரித்து என்னைத் தொட்டு பேசுவார், உறவுக்கும் அனுமதிப்பார்.

சண்டையில் பேசாமல் இருக்கும் தருணங்கள் மிகவும் கொடூரமான காலமாகவே நான் உணர்ந்திருக்கிறேன். உறவுகளோ, நட்போ அமையாத மெட்ரோ நகர வாழ்க்கையில் யாரிடமாவது இதைப்பேசி தோள் சாய்ந்து அழுது ஆறுதல் தேடிக்கொள்ள ஏங்கி தவித்திருக்கிறேன். இணையதளம் என்று ஒன்று இல்லாத காலத்தில் இதைப்பற்றி எங்கும் பேசமுடியாமல் தனிமையில் கண்ணீர் விட்டு கதறியிருக்கிறேன். இந்த வாழ்க்கை முறைதான் எங்களுக்குள் தொடர்ந்தது…

நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் வருடங்களாகின.. கடந்த 25 ஆண்டுகளில் எங்களுக்குள் தாம்பத்திய உறவு ஏற்படவே இல்லை.
என் பெண்ணும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள், எனக்கு இந்த வாழ்க்கை முறை பழகிவிட்டது, இப்போதெல்லாம் அவர் ஒருபக்கம் நான் ஒரு பக்கமென படுத்து உறங்க பழகிக் கொண்டோம். தொடரும் இந்த வாழ்க்கை முறையில் சில நேரங்களில் என்னை நானே குற்றப்படுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டேன். இந்தக் காலத்து இளம்பெண்கள் போல யாருக்காவும் எதையும் விட்டுக்கொடுக்காமல், என் தைரியமான குணத்துடன், என் வேலையின் தனித்துவ அடையாளத்துடன் நாகரீகமான உடையும் அணிந்து வாழ்ந்திருந்தால், அவருக்கு என் மீது ஆர்வம் குறையாமல் இருந்திருக்குமோ என எண்ணத் தொடங்கிவிட்டேன்.

ஒருவேளை அவருக்கு ஆணுறுப்பின் விரைப்புத் தன்மை குறைந்திருக்குமோ அதனால் என் மீது ஆர்வமில்லாமல் இருக்கிறார் எனவும் நினைக்கிறேன். நான் விரும்புவதெல்லாம் திருமணமான புதிதில் இருக்கும் தீவிரமான உறவு அல்ல. ஆனால் அன்பை நெருக்கத்தை வெளிப்படுத்தும் சின்னச் சின்ன தொடுகைகளை எதிர்பார்க்கிறேன், கட்டி அணைத்து, சின்னதாக முத்தமிட்டு இன்றைய நாளில் என்ன நடந்தது என்பதை கேட்க விரும்புகிறேன். திருமணமான புதிதில் செய்த குறும்புத்தனத்தை நினைவுபடுத்தி பேச விரும்புகிறேன். ஏதேனும் சில நேரங்களில் உறவுக்கான நெருக்கத்தை கோரும் சீண்டல்களுடன் உறவு வேண்டுமென எதிர்பார்க்கிறேன். ஆனால் என் விருப்பங்கள் எதுவுமே நிறைவேறியதில்லை. உறவில் எத்தனை மனக் கசப்புகள் இருந்தாலும் அவர்மீது இருக்கும் காதல் எனக்கு குறையவே இல்லை.

இதுகுறித்து மனநல மருத்துவர் வந்தனாவிடம் பேசியபோது, “எந்தவொரு பிரச்னை குறித்தும் பிறருடன் பேசும் போதுதான் விஷயத்தை எப்படி கையாளலாம் என்பது குறித்து யோசிக்க முடியும். இதை பேசுவதைப் பற்றி எந்தவொரு தயக்கமும் வேண்டியதில்லை. தற்போது இந்த விஷயத்தை எப்படி கையாளலாம் என்று பார்த்தால் அவர்கள் இப்போது மாதவிடாய் நிற்கும் காலத்தை நெருக்கிக் கொண்டிருப்பார்கள், இந்த நேரத்தில் ஹார்மோன் இம்பேலன்ஸ் உருவாக வாய்ப்பு உண்டு. இதற்கு தினமும் உடற்பயிற்சி தவறாமல் செய்யவேண்டும். மேலும் அவர்கள் பொழுதுபோக்குக்கு ஹாபியாக ஏதாவது செய்யத் தொடங்க வேண்டும். முதலில் 52 வயதில் தனக்கு செக்ஸ் உணர்வு தோன்றுவது குறித்து அவர்கள் எந்தவித குற்றவுணர்ச்சிக்கும் ஆளாக தேவையில்லை. மனிதர்களுக்கு ஏற்படும் பசி, தூக்கம் போன்ற இயல்பான உணர்வு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூகத்தில் பெண் இதைப்பற்றி பேசுவது தவறானது என்று போலி நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் புறந்தள்ளி விடுங்கள்” என்கிறார்.

மேலும், “செக்ஸுவல் உணர்வு குறித்து குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகும் போது மனச்சோர்வு ஏற்படும். மனிதர்க்கு மனச்சோர்வு ஏற்பட முக்கிய காரணம் குற்றவுணர்வுதான். மனச்சோர்வினால் ஏற்படும் பயோகெமிக்கல் இம்பேலன்ஸ் மன அழுத்தத்தை உருவாக்கும். செக்ஸுவல் உணர்வு என்பது ஆண் – பெண் இருவருக்குமான இயல்பான எதிர்பார்ப்பு. இதுகுறித்து உங்கள் கணவரிடம் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதையும் உங்கள் தேவையை குறித்தும் தயங்காமல் பேசுங்கள். நீங்கள் எதிர்பார்ப்பது செக்ஸ் என்பதையும் கடந்து எமோஷ்னல் சப்போர்ட் வேண்டுமென்று நினைக்கிறீர்கள், உங்கள் இருவருக்குமான உறவில் உங்களின் தேவை என்ன என்பது குறித்து தெளிவாகவும் தைரியமாகவும் பேசுங்கள்” என்கிறார் மருத்துவர் வந்தனா.