டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

முதல் தர போட்டியின் கீழ் வராது என்பதால் 3 நாள் நடக்க இருக்கும் இந்த போட்டியில் 18 வீரர்களையும் களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த போட்டியில்  நன்றாக விளையாடும் வீரர்கள் டெஸ்ட் தொடருக்கான பிளேயிங் 11-க்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஷிகர் தவானும், முரளி விஜய்யும் களம் இறங்குவார்கள். கே.எல்.ராகுலும் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் பிளேயிங் 11-ல் சேர்க்கப்படுவாரா இல்லையா என்பது இந்த பயிற்சி ஆட்டத்தின் போது முடிவு செய்யப்படும். முரளி விஜய் இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை இதற்கு முன்னரே வெளிப்படுத்தியிருப்பதால் அவரது இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் ஷிகர் தவானின் ஆட்டத்திறன் இங்கிலாந்தில் சிறப்பாக இல்லை என்பதால் அவர் சரியாக விளையாடாத பட்சத்தில் கே.எல்.ராகுலுக்கு அந்த இடம் வழங்கப்படும்.

பேட்டிங் மிடில் ஆர்டரைப் பொறுத்தவரை சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி மற்றும் அஜிங்கயே ரகானே போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் அதில் எந்த மாற்றமும் இருக்காது. ரகானே, புஜாரா உள்ளிட்டோருக்கு இங்கிலாந்து பிட்ச்சில் நல்ல அனுபவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பர் விரித்திமான் சாகாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று கோலி எந்த அதிரடி முடிவும் எடுக்காத வரையில் அணியில் கார்த்திக்கின் இடம் உறுதி.

பந்து வீச்சில் மட்டும் இந்திய அணிக்கு மிகப் பெரிய குழப்பம் நிலவுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் காயமடைந்துள்ளதால் அவர்கள் இருவரும் முதல் டெஸ்டில் இடம் பெறமாட்டார்கள். ஆகையால் உமேஷ் யாதவ் , இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது சமி உள்ளிட்டோர் பந்து வீச்சை சிறப்பாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஸ்பின் பவுலிங் பிரிவில் ரவிசந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தியாவின் ஆஸ்தான டெஸ்ட் ஸ்பின்னர்கள். ஆனால் குல்தீப் யாதவின் ஆட்டத்திறன் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக வெளிப்பட்டிருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்குவதற்கு கோலிக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களம் இறங்கப் போகிறதா அல்லது 2 வேகப்பந்து வீச்சாளர்கள் 3 ஸ்பின்னர்களுடன் களம் இறங்குமா என்பதை கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகிய இருவரும்தான் முடிவு செய்வார்கள். இந்த எஸெக்ஸ் கவுண்டி ஆட்டம் இந்திய அணி தனது திறமையைப் பரிசோதித்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.