இன்று இந்தோனேஷியாவில் ஆசியப் போட்டிகள் தொடக்கம்

ஆசியப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து உலகின் பெரிய விளையாட்டு விழாவாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று தொடங்குகின்றன.

இந்த ஆசியப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் 524 வீரர்-வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் குழு பங்கேற்கிறது. இந்த போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது.

தொடக்க விழா ஜகார்த்தாவில் உள்ள ஜெலரோ பங் கர்னோ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 4000 கலைஞர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சிகள் இரவு பத்து மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.