3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில், மூன்றாது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன், முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கும், இங்கிலாந்து 161 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர், 521 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்கியது. அந்த அணி, விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்த நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தது.

ஜென்னிங்சை 13 ரன்களிலும், அலெஸ்டர் குக்-ஐ 17 ரன்களிலும் அவுட்டாக்கி, இங்கிலாந்து அணியின் சரிவுக்கு வழி வகுத்தார் இஷாந்த் சர்மா. மேலும், 62 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.

பின்னர் கைகோர்த்த பென் ஸ்டோக்ஸும், ஜோஸ் பட்லரும் இந்திய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பட்லர், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இந்த இணை, 5-வது விக்கெட்டிற்கு 169 ரன்கள் சேர்த்த போது, 106 ரன்களில், ஜோஸ் பட்லரை, எல்.பி.டபிள்யூ மூலம் பும்ரா வெளியேற்றினார்,  இருந்த போதும், 9-வது விக்கெட்டிற்கு இணைந்த அடில் ரஷீத், ஸ்டூவர்ட் பிராட் ஜோடி, 50 ரன்கள் சேர்த்து, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது.

ஸ்டூவர் பிராட்-ஐ ஒருவழியாக, பும்ரா அவுட்டாக்கியதும், வெற்றியை நெருங்கிய உற்சாகத்தில் இந்திய வீரர்கள் திளைத்தனர். ஆனால்,  5 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சோர்வடைந்தனர். இதனால், இந்திய அணி வெற்றிக்கனியை பறிப்பதற்கு மேலும் ஒரு நாள் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நான்காம் நாள் முடிவில், இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணி வெற்றிபெற வேண்டுமானால், 210 ரன்கள் தேவைப்படும் நிலையில், கடைசி விக்கெட்டை விரைந்து வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்யும் முனைப்பில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது.