மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 364 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை விராட் கோலியும், ரிஷப் பந்தும் தொடர்ந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை சிரமம் இன்றி எதிர்கொண்ட இவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பொறுப்பாக ஆடிய கோலி, டெஸ்ட் அரங்கில் தனது 24-வது சதத்தை பதிவு செய்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் 92 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். விராட் கோலி 139  ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பின்னர் களமிறங்கிய வீரர்களுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 649 ரன்கள் சேர்த்திருந்த போது, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 100 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் சார்பில், தேவேந்திர பிஷூ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 2-ம் நாள் முடிவில் அந்த அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. 555 ரன்கள் பின்தங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள், பாலோ-ஆன்- ஆகும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.