`வெற்றிமாறன் கதையில், சிம்பு ஹீரோ, நான் வில்லன்’: உண்மையை போட்டு உடைத்த தனுஷ்

வடசென்னை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபிள் நடைப்பெற்றது.விழாவில் படத்தின் இயக்குனர் வெற்றி மாறன், அமீர், நடிகர்கள் தனுஷ், ஐஸ்வரியா ராஜேஷ், ஆண்டிரியா, டேனியல் பாலாஜி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய தனுஷ் “வடசென்னை திரைப்படம் பற்றி முதலில் நானும் இயக்குனர் வெற்றிமாறனும் பேசியபோது எதுவும் சரியாக அமையவில்லை. வெற்றிமாறன் என்னிடம் சிம்புவை வைத்து வடசென்னை படத்தை தொடங்க போவதாகக் கூறினார். அதற்கு நானும் சரி என்றுவிட்டேன்”என்று பேசினார்.

மேலும் “அதன் பிறகு, வெற்றிமாறன் வந்து படத்தில் ஹீரோ சிம்புக்கு எதிரான முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்று உள்ளது. நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு நான் சார் எனக்கு பெருந்தன்மை உண்டு. ஆனால் அந்தளவுக்குப் பெருந்தன்மை கிடையாது என்று சொல்லிவிட்டேன்” என்று தனுஷ் கூறினார்.

பிறகு வடசென்னை படத்தில் நடிக்கும் வாய்ப்பு தன்னிடமே மறுபடியும் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறிய தனுஷ், படத்தில் அமீரின் நடிப்பு அற்புதமாக இருப்பதாக புகழ்ந்தார். சமுத்திரக்கனி, ஐஸ்வரியா ராஜேஷும் சிறப்பாக நடித்துள்ளதாக தனுஷ் தெரிவித்தார்.