ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா

ஐநாவுக்கான அமெரிக்க முதல் பெண் தூதராக 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிக்கி ஹாலே நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் அதிபர் ட்ரம்ப்-க்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது  ஐநா-வுக்கான அமெரிக்க தூதர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிக்கி ஹாலே-வுடன் இணைந்து தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த ஆண்டு இறுதியுடன் பதவியிலிருந்து நிக்கி ஹாலே விலக உள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க  அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இல்லை என மறுப்பு தெரிவித்த  நிக்கி ஹாலே, டிரம்ப்-புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

திடீரென நிக்கி ஹாலே ராஜினாமா செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமெரிக்கரான இவர், ஒபாமா பதவி வகித்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் 116-வது கவர்னராகவும் பதவி வகித்துள்ளார்.