பசிபிக் நாடான பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதே போல் இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.  2000-த்திற்கும் அதிகமானோர் இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் தாக்கப்பட்டு ஒருமாதம் கூட ஆகாத நிலையில், இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீதிகளில் திரண்டனர். பாலி மற்றும் ஜாவா பகுதிகளில் ஏற்பட்ட இந்த பாதிப்பில் 3 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.