ஜியோ டவருக்கு எதிராக போராட்டம்

ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் ஜியோ போன் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்தது. செல்போன் டவர் அமைப்பதால் மக்கள் நோய் வாய்ப்பட்டுச் சாவதோடு பறவையினங்களும் அழிந்துகொண்டிருக்கிறது என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில்
ஜியோ போன் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, “ஏற்கெனவே இக்கிராமத்தில் அனைத்து கம்பெனிகளின் செல்போன் கோபுரம் அமைந்துள்ளதால் கதிர்வீச்சுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். செல்போன் கோபுரங்களால் பறவைகள் பாதிக்கப்படுகிறது. எனவே பொது மக்களைப் பாதிக்கக்கூடிய வகையில் அமைக்கப்படும் செல்போன் கோபுரத்தை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்கள் நடமாட்டம் இல்லாத வெளிப்பகுதியில் செல்போன் கோபுரத்தை அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.